மத்திய பிரதேச அரசியலை இன்னமும் உலுக்கிக் கொண்டு இருக்கும் "வியாபம்' வேலை நியமன ஊழலைப் போல, எடப்பாடி தலைமயிலான அ.தி.மு.க அரசின் அரசின் கடைசி காலக்கட்டத்தில் புதிய வேலை நியமனம், இடமாறுதல் என சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்து கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister-karupann.jpg)
ஆடியோ ஆதாரத்துடன் சிக்கியவர் சுற்றுச் சூழல் துறை அமைச்சரான கே.சி கருப்பணன். கடந்த மாதம் இந்த துறையில் உதவி பொறியாளர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு பதவிதர வேண்டும். அதற்காக வெற்றி பெற்றவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போனில் பேசி இருக்கிறார் அமைச்சரின் அரசியல் பி.ஏவான கே.ஆர் ஜான் என்பவர்.
அமைச்சரை பக்கத்தில் வைத்துக் கொண்டே ஸ்பீக்கர் போனில் பேசிய ஜான், சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் 15 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் வரை ரேட் பேசி இருக்கிறார். இது அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காக அல்ல, அவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களது சொந்த மாவட்டங்களில் பணி கொடுப்பதற்காக ஜான் பேசி இருக்கிறார். ஒவ்வொருவரிடமும் எவ்வளவு தொகை தர முடியும் என கேட்டிருக்கிறார்.
அவர்கள் தருவ தாக சொன்ன தொகை பற்றிய ஆதாரங்கள் வேண்டும் என்பதற்காக செல்போன் பேச்சை ஜான் டேப் செய்துள்ளார். கே.சி கருப்பணன் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது தம்பி திவாகரன் மூலமாகத்தான் அமைச்சர் பதவி வாங்கினார். அவருக்கு நியமிக்கப்பட்ட உதவியாளர்கள்கூட சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஜான் மட்டுமே கே.சி கருப்பணனின் நேரடி சாய்ஸ். அதனால் ஜான் மூலம் தான் அவர் ரகசியங்களை பறிமாறிக் கொள்வார்.
இதை தெரிந்துகொண்ட எடப்பாடியின் ஆட்கள் அவரது செக்யூரிட்டி போலீஸ் மூலம் ஜானின் போனில் இருந்த விவரங்களை எடுத் திருக்கிறார்கள். அதை அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மூலமாக பரப்பியிருக்கிறார்கள். நக்கீரனில் வெளிவந்த அந்த பேச்சுக்களை மு.க.ஸ்டாலின் தனது பொதுக்கூட்டத்தில் இரண்டு நிமிடம் ஒலிபரப்பு செய்தார். அதனால் இந்த விவகாரம் தீயாக பரவியது என்கிறார்கள் கருப்பணனுக்கு நெருக்கமானவர்கள்.
இந்த விவகாரம் வெளியே வந்ததும் அமைச்சரையும் அவரது பி.ஏ.வையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் கைதுசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பெரிதாக எழுந்தது. உடனே இதைப்பற்றி கருப்பணனிடம் எடப்பாடி விசாரித்தார். தி.மு.க.வினர் மோசடி என கருப்பணன் சொல்ல, எடப்பாடி ஏகத்துக்கும் டென்சன் ஆகி, உளவுத்துறை ரிப்போர்ட்டை முன்வைத்து எகிறியுள்ளார். இந்த விவகாரத்தை எப்படியாவது மூடி மறைத்து விடுங்கள் எனவும் உத்தரவிட்டாராம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister-karupann1.jpg)
கருப்பணன் மட்டும் அல்ல, எடப் பாடிக்கு மிகவும் நெருக்கமான சேலம் இளங் கோவன், 200 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத் தில் உள்ள அனைத்து துறைகளிலும் புதிய பணி நியமனம் மற்றும் மாறுதல் ஆகிய வேலைகளை செய்துள்ளார். விஜயபாஸ்கரின் சுகாதாரத்துறை யில் தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற மருத்துவர்களையும், சுகாதாரப் பணியாளர்களை யும் வேண்டுமென்றே தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள ஊர்களுக்கு நியமனம் செய்வார்கள். அதன்பிறகு அவர்களை சொந்த ஊர்களுக்கு மாறுதல் செய்ய லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்பார்கள். இதற்காக ஒரு பி.ஏ.வையே விஜயபாஸ்கர் வைத்திருக்கிறார்.
ஆட்சியின் கடைசி கட்டம் என்பதால் அமைச்சர் வேலுமணியிடம் உள்ள ஒரு அலுவலக உதவியாளர் மூலம், பணி நியமனம் மற்றும் மாறுதல் என எதுவும் என்னை கேட்காமல் நடக்க கூடாது என உள்ளாட்சி துறையில் உத்தரவிட்டு கோடிக்கணக்கில் வசூல் செய்து கொண்டிருக்கிறார் என சுட்டிக்காட்டுகிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள். சில துறைகளில் அமைச்சர்கள் மட்டுமல்ல அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமான பெண்கள் என பலரும் இந்த விவகாரங்களில் தலையிடுகிறார்கள். கருப்பணன் விவகாரத்தில் செல்போன் பேச்சில் சிக்கிய விண்ணப்பதாரர்கள் அனைவரின் செல்போனையும் அணைத்து வைக்குமாறு உளவுத்துறை போலீசார் உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதனால் அவர்களை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
விவகாரம் வெளியானதால், கொடுத்த காசுக்கு ஏற்றவாறு அனைவருக்கும் பணி நியமனம் மற்றும் மாறுதல்களை தந்து விடுங்கள் என அனைத்து துறையில் உள்ள அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதல்வர் அலுவலகத்தில் இருந்தே உத்தரவுகள் பறந்திருக்கின்றது. பணம் கொடுத்துவிட்டு வேலை கிடைக்காதவர்கள், பணியிட மாற்றம் பெற முடியாதவர்களுக்கு உட னடியாக அவர்கள் அமைச்சர்களிடம் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இந்த ஆட்சியின் கடைசி கட்டத்தில் அடிக்கும் கொள்ளையை பற்றி யாரும் போலீசில் புகார் கொடுத்துவிட கூடாது என்பதற்கான ஏற்பாடு என்கிறார்கள் தலைமைச்செயலக அதிகாரிகள்.
விஞ்ஞான ரீதியாக நடைபெறும் இந்த கொள்ளையில் எதிர்பாராத விதமாக கேசி கருப்பணன் மட்டும் சிக்கிக் கொண்டுவிட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-02/minister-karupann-t.jpg)